JAFFER PANAHI-யின் THE WHITE BALLOON – சினிமா விமர்சனம்




சினிமா என்பது பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல; அது ஒரு கலை. காவியத்திற்கு சரிசமமான மற்றொரு உறுதியான, எளிமையான வடிவம். அது நாம் சார்ந்த இனம், மொழி, மதம், நாடு என எல்லாவகையான பரிமாணங்களையும் கலாசாரத்தோடும் பாரம்பரியத்தோடும் பிண்ணப்பட்டிருக்க வேண்டும். இதை ஈரானியர்கள் உணர கிட்டத்தட்ட 60 வருடங்கள் பிடித்தது. ஒரு குறிப்பிட்ட அழுத்ததிற்கு மேல் வெடித்துச் சிதறும் எரிமலையாய் 90-களில் வெடித்து சிதறியது ஈரானிய சினிமா அலை. உலகின் மிகக் கட்டுபாடுகளுக்குட்பட்டு திரைப்படங்கள் எடுக்கப்படும் இடமாக தாரளமாக ஈரானை சொல்லலாம். ராணுவ ஆட்சி, மதக்கட்டுப்பாடு, பழமைவாதிகள், போர், அரசியல் காரணங்கள் என வெளிப்படையான பல பிரச்சனைகளுக்கிடையே கதை எழுதுவதிலிருந்து சென்சார் வரை என ஏகப்பட்ட மறைமுக பிரச்சனைகளைத் தாண்டியே ஒவ்வொரு ஈரானியத் திரைப்படமும் இன்றுவரை வெளியாகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் எனில் நேரடியாக தயாரிப்பாளரை அணுகி படத்தை எடுத்துவிட முடியாது. கதையை அரசிடம் காட்டி அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக செய்யவேண்டும். எனக்குத் தெரிந்து எழுதும் கதைக்கே தணிக்கை குழு இருந்த ஒரே சினிமா ஈரானிய சினிமா தான். கதையை அப்ரூவ் செய்துவிட்டால் போதுமா? திரைக்கதைக்கும் இதே நிலமை தான். அப்படியே  நீங்கள் நினைத்தமாதிரி கதை, திரைக்கதை எழுதி படத்தை எடுத்துவிட்டாலும் ரிலிசில் ஒரு பிரச்சனை இருக்கிறது. நம்மூரில் யு, ஏ என சான்றிதழ் வழங்குவது போல் அரசு அங்கு A,B, C என மூவகையாக ஒரு திரைப்படத்தை வகைப்படுத்தும். ஏ, என்றால் நிறைய திரையரங்குகளில் ரிலிஸ் செய்யலாம் என்று அர்த்தம்.  பி என்றால் சுமாரான திரையரங்குகளிலும் சி என்றால் மட்டமான ஒருசில திரையங்குகளில் லிமிடேட் எடிசனாகவும் ரிலிசாகும். நீங்கள் 1000 கோடியில் எடுத்தாலும் சி சான்றிதழ் வழங்கிவிட்டால் தெருக்கோடி தான்.
ஈரானிய சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றியும் சினிமாவின் பின்புலத்தைப் பற்றியும் பேசினால் பொங்கிக்கொண்டே போகலாம் 1500 பக்கங்களுக்கு. அவ்வளவு பிரச்சனைகளை சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள இயக்குநர்கள்.

ஈரானிய சினிமா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரவேண்டிய ஆள் அப்பாஸ் கியராஸ்டமி. சத்யஜித்ரேயின் இறப்பைக் கண்டு மனம் வெதும்பிய அகிரா குரசோவா இவ்வாறு கூறினார்.

‘சத்யஜித்ரேயின் இறப்பைக் கண்டு என் மனம் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறது. ஆனால் சத்யஜித்ரேயின் இழப்பை ஈடுகட்ட, அவருக்கு சரிசமமான திறமையுடன் ஒருவரை இவ்வுலகிற்கு தந்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.’

இப்படி அகிரா கூறியது அப்பாஸ் கியராஸ்டமியைத் தான். யோசித்துப் பாருங்கள். உலகசினிமா பிதாமகர்களில் ஒருவரான அகிரா, மற்றொரு ஜாம்பவனான ரே-க்கு சரிசமமானதொருவராக அப்பாஸ் கியராஸ்டமியைக் கூறுகிறார் எனில் அவரின் திறமை எப்படியிருந்திருக்க வேண்டும். இம்மனிதர் மாத்திரம் சினிமா எடுக்காமல் ஓவியத்திலயே இருந்துவிடலாம் என்று தன் சிறுவயதில் எண்ணியிருந்தால் ஈரானிய சினிமா ஒட்டுமொத்தமாக அழிந்திருக்கும் என்றே கூறுவேன். ஈரானிய சினிமாவின் புரட்சிக்காரன் ஜாபர் பனாஹி,  கலகக்காரன் மொஹ்சன் மக்மல்பப் மட்டுமின்றி இன்னும் எத்தனையெத்தனையோ கலைப்படைப்பாளிகள் தடம் மாறி எங்கோ ஒரு மூலையில் இருந்திருப்பார்கள். ஆனால் நல்லவேளையாக கியராஸ்டமி அம்முடிவை எடுக்கவில்லை.

ஜாபர் பனாஹியின் திரைப்படம் இது எனக்கூறிவிட்டு அப்பாஸ் கியாராஸ்டமியை புகழ்ந்து கொண்டிருக்கிறானே என்ற எண்ணம் தோன்றலாம். நியாயமாக பார்த்தால் அப்பாஸ் கியாராஸ்டமியின் திரைப்படங்களைப் பற்றி தான் முதலில் எழுதியிருக்க வேண்டும். ஆனால் கியாராஸ்டமியின் திரைப்படங்களைப் பற்றி எழுத போதுமான அறிவு என்னிடத்தில் இல்லை. அதுமட்டுமின்றி இப்படத்தைப் பொருத்தவரை அப்பாஸ் கியாராஸ்டமி இல்லையெனில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்காது என்பதே உண்மை.

நான்கு தொலைக்காட்சி குறும்படங்களை IRIP (ஈரானிய தொலைக்காட்சி குழுமம்) உதவியின்றி தன் சொந்த பணத்தில் தயாரித்த பனாஹி, தன் நண்பர் பர்விஷ் கூறிய ஒரு குட்டிக்கதைப் பிடித்துப் போக, அதையே குறும்படமாக எடுக்க முடிவெடுத்து எட்டு பக்கங்களில் எழுதிய கதையே THE WHITE BALLOON. அதை அப்ரூவலுக்காக IRIB-கு அனுப்ப, வழக்கம்போலவே அவரது கதை நிராகரிக்கப்பட்டது (இதுவரை ஜாபர் பனாஹியின் ஒரு கதை கூட ஈரானிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அதுமட்டுமின்றி ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்பட்ட ஒரே திரைப்படம் THE WHITE BALLOON மட்டும்தான்). பனாஹியின் இம்முயற்சியைக் கேள்விபட்ட அப்பாஸ் கியாராஸ்டமி, பனாஹியின் கதையை வாங்கிப் படித்து, தானே திரைக்கதை எழுதித் தருவதாக ஒப்புக்கொண்டார்.

அதற்குமுன் ஒரு குட்டி ப்ளாஷ்பேக். கியாராஸ்டமியின் ட்ரையாலஜி என்றழைக்கப்படும் முப்படைப்புகளில் பெரும்புகழடைந்த UNDER THE OLIVE TREES திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் பனாஹி. அப்போதே கியாரஸ்டமி கூறிய ஒரு வாக்கியம் ‘நம் திரைப்படத் துறையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் பனாஹி.’ ‘பனாஹி எந்தவொரு சூழ்நிலையிலும் தவறான திரைப்படத்தை எடுக்கமாட்டார்’ என்று ஓப்பன் டாக் கொடுக்குமளவுக்கு கியராஸ்டமிக்கு பனாஹியின் மேல் நம்பிக்கை இருந்தது. அதை இன்றுவரை காப்பாற்றியும் வருகிறார். 2015-ல் வெளிவந்த TAXI திரைப்படம்கூட அந்த நம்பிக்கையை காப்பாற்றியது.

இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம். கியராஸ்டமி இப்படத்தின் திரைக்கதையை எழுதிக்கொடுக்க முன்வந்த இருகாரணங்களில் முக்கியமானதொன்று பனாஹியின் திறமையின் மீது இருந்த நம்பிக்கை; மற்றொன்று இத்திரைப்படம் குழந்தைகள் பற்றியது. (கியராஸ்டமியின் முதலிரு தொலைக்காட்சி திரைப்படங்களும் குழந்தைகளைப் பற்றியதே. ஸ்பில்பெர்க்கை விட குழந்தைகளை அதிகமாக நேசக்கும் கலைஞன் கியராஸ்டமி.) தான் கூறியது போலவே அற்புதமான திரைக்கதையை அசால்டாக எழுதிக்கொடுத்தது மட்டுமின்றி, அதை IRIB-யிடம் கொடுத்து அப்ரூவலும் வாங்கி தந்தார் கியராஸ்டமி.

அப்ரூவல் கிடைத்தாயிற்று; ஆரம்பித்து விடலாம் ஷூட்டிங்கை என்று உடனுக்குடனே முடிவு செய்யாமல், தன் கதைக்குத் தேவையான பாத்திரங்களைத் தேடி அலைந்தார் பனாஹி. படத்தில் பெண்குழந்தையின் அண்ணனாக நடிக்க ஒரு சிறுவனுக்காக 6000 சிறுவர்களைக் கண்டெடுத்து அவர்களில் இருந்து மொஹ்சன் எனும் சிறுவனைப் பிடித்தார். படத்தில் வரும் ஒரு ராணுவ வீரன் வேடத்திற்காக டெஹ்ரானிலிருந்து 300 கிமி பயணம் செய்து தேடியலைந்து ஒருவரைக் கொண்டுவந்தார். மீன் விற்கும் கடைக்காரராக நடிக்க ஒரு நிஜ கடைக்காரரையே நடிக்கவைத்தார். ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது நாயகியான குட்டிப்பெண் ஐதாவிற்கு தவறுதலாக கொதிநீர் காலில் விழுந்து அதற்காக 20 நாட்கள் தள்ளிவைத்தது போக ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்தார் பனாஹி. புதிய டெஹ்ரானின் லுக் படத்திற்கு இடஞ்சலாக இருக்கும் என கியராஸ்டமி நம்பியதால் பழைய டெஹ்ரானின் எச்சமாக இருந்த பஷன் நகரில் படத்தை எடுத்து முடித்தார்.

படத்தின் கதையை ஒரே பத்தியில் சொல்லிவிடலாம்; புத்தாண்டு அன்று தங்கமீன் வைத்திருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு பாரசீக குடும்பத்திலும் பின்பற்றும் வழக்கம். வீட்டில் ஏற்கனவே மீன்கள் இருந்தாலும் கடையில் பார்க்கும் அழகான ஒரு தங்கமீனை வாங்க நினைக்கிறாள் ரசியா எனும் ஏழு வயது பெண்குழந்தை. செல்லும் இடத்தில் தவறுதலாக  அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய பணத்தை தொலைத்துவிடுகிறாள். அது ஒரு அன்டர்க்ரவுண்டில் மாட்டிக்கொள்கிறது. மீன் வாங்க சென்ற தன் தங்கையைத் தேடி வரும் அண்ணன் . இவர்களிருவரும் சந்திக்கும் பல்வேறு மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலை இவற்றையெல்லாம் 80 நிமிடத்தில் சொல்லும் திரைப்படமே THE WHITE BALLOON.

இவ்விடத்தில் பாராட்டப்பட வேண்டியது கியரஸ்டமியின் திரைக்கதையைத் தான். படத்தின் மேலோட்டமான கதை, மையக்கதை என இருவகையாக பிரித்து எழுதப்பட்ட திரைக்கதை. அதாவது மேலோட்டமான கதை என்னவென்றால் ரசியா மீன் வாங்குவது; மையக்கதை என்பது அவள் சந்திக்கும் மனிதர்கள். மேலோட்டமான கதையை நாம் மையக்கதையாக நம்பும் சூழ்நிலையில் படம் துவங்கியிருக்கும். முடியும்போது மேலோட்டமான கதை எது , மையக்கதை எது என நம்முள் உணரவைத்திருப்பார் பனாஹி. மையக்கதையை நாம் உணரும் நேரத்தில் இதுவரை நாம் எதை உண்மையென நம்பினோமோ அத்தனையையும் மறந்து சிலாகித்துக் கொண்டிருப்போம். ரசியாவின் அண்ணன் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை மறந்து ராணுவ வீரனின் ஏக்கத்தை நினைத்து நாம் மனம் கசிவோம்.  ரசியா மீன் வாங்கியது நம் மனதுள் நிற்காது. பலூனை விற்கும் அந்த ஆப்கானிய அகதி சிறுவனின் தனிமையே நம்மை வாட்டியெடுக்கும்.

பனாஹியின் மிகச்சிறந்த துவக்கம் என இத்திரைப்படத்தைத் தாரளமாக சொல்லலாம். ஈரானிய அரசின் மெத்தனத்தால் ஆஸ்கார் அனுப்பப்பட்ட இத்திரைப்படம் திரும்ப பின்வாங்கப்பட்டது. டைம்ஸ் இதழ் பட்டியலிட்ட உலகின் சிறந்த 50 படங்களுல் ஒன்றாக தேர்வானது இத்திரைப்படம். அது மட்டுமின்றி கேன்ஸ் உட்பட பல உலகத்திரைப்பட விழாக்களில் பங்கேற்ற திரைப்படம். மிஸ் செய்யாமல் பார்த்துவிடுங்கள். யூட்யூப்பிலேயே கிடைக்கிறது.

பின்குறிப்பு – அப்பாஸ் கியரோஸ்டமி, மக்மல்பப், ஜாபர் பனாஹி ஆகியோரின் பிற திரைப்படங்களைப் பற்றி வரிசையாக எழுத இருப்பதால் இப்பதிவில் சொல்லமறந்த, சொல்லவேண்டிய பல விசயங்கள் பின்வரும் பதிவுகளில் தொடரும்.



Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை