MIRACLE IN CELL NO. 7 – சினிமா விமர்சனம்



என்னதான் ஹார்ரர், சயின்ஸ்-பிக்சன், த்ரில்லர், ஆக்சன் என்று பலவகையான திரைப்படங்களைப் பார்த்தாலும் இந்த ஃபீல்-குட் திரைப்படங்கள் தரும் அனுபவம் அலாதியானது. பெரும்பாலான ஃபீல்-குட் திரைப்படங்கள் நம்மையறியமால் நம் மென் உணர்வை தூண்டிவிடக்கூடியவை. அதனால்தான் இந்த வகையறா திரைப்படங்களில் நடித்துவரும் டாம் ஹேங்ஸ் உலகின் மோஸ்ட் பவர்ஃபுல் ஹீரோவாக இருக்கிறார் (மோஸ்ட் வான்டட் ஹீரோ – ஜானி டெப்).

ஃபீல் குட் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் தாராளமாய் ஏராளம் உள்ளது. ஹாலிவுட் தவிர்த்து வேற்றுமொழிகளில் வரும் அற்புதமான பல திரைப்படங்கள் தற்போது தான் நம் பார்வையில் விழுகின்றன. பாரசீக நாடுகளில் மஜித் மஜிதி போன்றோர்  கலக்கிக் கொண்டிருக்க, சைலன்டாக கொரியர்கள் உலகத்தரத்தில் பல அற்புத படைப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.  கிம்-ஜி-வூன், கிம்-கி-டுக், சான்-வூக்-பார்க் போன்றோர் எடுக்கும் திரைப்படங்கள் தற்போது உலகளவில் ட்ரென்டாகி வருகிறது. கொரியர்களின் சினிமாக்கள் அழகியலைக் கவித்துமாக பேசுகிறது. அந்த கொரியர்களின் படைப்புதான் இந்த திரைப்படம் .

லீ-வான்-க்யுன்க் இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த இத்திரைப்படம் அப்போதைய கொரிய பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கியது. சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன், ஐ யம் சாம் போன்ற திரைப்படங்கள் பிடிக்குமெனில் கண்டிப்பாக இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகமிகப் பிடிக்கும். கதையானது மனநலம் குன்றிய தந்தைக்கும் அவனுடைய மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. லீ-யாங்-கோ எனும் மனநலம் குன்றியவர் தன் ஆறு வயது மகள் யே-சங்குடன் சந்தோஷமாக வசித்து வருகிறார். தன் மகள் ஆசைப்படும் ஒரு ஸ்கூல்பேக்கை வேறொரு குழந்தையின் பெற்றோர் வாங்க, அந்த பேக் என் மகளுடையது என வம்பு செய்கிறார் லீ. அப்பிரச்சனைக்குப் பின் ஒருநாள் மார்க்கெட்டில் நடந்துசென்று கொண்டிருக்கும் ஒரு பெண் , லீ-யாங்-கோ ஒரு பெண்குழந்தையை ஏதோ செய்துகொண்டிருப்பதைக் கண்டு போலிசை அழைக்கிறாள். அந்த பெண்குழந்தை தான் ஸ்கூல் பேக்கை வாங்கியவள். அவளை வல்லுறவில் ஈடுபடுத்தி கொடூரமாக கொன்றுவிட்டான் லீ-யாங்-கோ என்று கேஸ் போட்டு போலிஸ் கைது செய்கிறது. இறந்த பெண்ணின் குடும்பமோ பெரும் வசதி படைத்தது. லீ-யாங்-கோவிற்கு மரணதண்டனை அளித்து கோர்ட் தீர்ப்பளிக்கிறது. அவன் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறான். ஜெயிலில் அவனுடன் சில கிரிமினல்கள் இருக்கிறார்கள். அந்த அறையின் எண் தான் 7.

தன் தந்தையை பிரிந்த யே-சாங் எப்படியாவது அவருடன் வாழவேண்டும் என துடிக்கிறாள். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு ஒருமுறை லீ-யாங்-கோ உதவ, அவனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்து தருவதாக அவர்கள் வாக்களிக்கிறார்கள். அதன்படி அவனுடைய குழந்தையை சிறையில் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறார்கள். இந்த உண்மையை ஜெயில் வார்டனுக்கு தெரிய வருகிறது. அவரோ தன் மகளை நோயினால் பறிகொடுத்தவர்.  இதன்பின் யே-சாங் சிறைக்கு யாருக்கும் தெரியாமல் பலமுறை வருகிறாள். ஒருகட்டத்தில் லீயின் அறையில் இருப்பவர்களுக்கும், ஜெயில் வார்டனுக்கும் லீ எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மை தெரியவருகிறது. மறு விண்ணப்பம் அளித்து மீண்டும் சரிவர விசாரனை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை வைக்கிறார்கள். மறுவிசாரணையில் தான்தான் அக்குழந்தையைக் கொன்றதாக லி-யாங்-கோ வாக்குமூலம் அளிக்கிறான். எதனால் அவன் அப்படி செய்தான்? யே-சாங்கின் நிலை என்ன? அந்த அறையில் இருந்தவர்களின் கதி என்ன? என்பது போன்றவை மீதிப்படம்.

படத்தில் பாராட்டப்படவேண்டிய விசயம் ஒளிப்பதிவு. இவ்வளவு ரிச்சான ஒளிப்பதிவை நான் எந்தவொரு திரைப்படத்திலும் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் கேமரா கவிதை பாடுகிறது. கொரியர்களுக்கென்று தனி கேமரா செய்து விற்பார்கள் போல. A BITTERSWEET LIFE –வை விட மிகத் தெளிவான அற்புதமான ஒளிப்பதிவு. இத்திரைப்படத்தின் கேமரா ஆங்கிள் , கலரிங், வி.எப்.எக்ஸ் போன்றவற்றை நம் தமிழ் ஆட்களும் பின்பற்றவேண்டும். இவ்வளவு அழகான ஒளிப்பதிவைத் தந்தமைக்காக ஒளிப்பதிவாளர் காங்-ஸ்யூங்-கி-யை எவ்வவளவு பாராட்டினாலும் தகும்.

லீ-யாங்-கோவாக வரும் ர்யூ-ஸ்யூங்-ர்யாங் –கும் (இவனுங்க பேர எழுதறதுக்குள்ள விடிஞ்சிடும் போல) மகளாக வரும் கால்-சோ-வான் இருவரும் ஏதோ ஒரிஜினல் தந்தை-மகள் என நினைக்கத் தோன்றும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கூட ஆர்ட்டிபிஷியலை பார்க்க இயலவில்லை. அவ்வளவு இயற்கையான நடிப்பு. ஏதோ திரைக்குள் இருவரும் வாழ்ந்தது போன்றதொரு உணர்வு. யாருக்காக இல்லையென்றாலும் இவர்களிருவரின் நடிப்புக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.


இப்படத்தின் இயக்குநர் ஏற்கனவே நான்கைந்து திரைப்படங்களை எடுத்திருந்தாலும் பெரிய அளவில் பேர்வாங்கி கொடுத்த திரைப்படம் இதுதான். இத்திரைப்படம் கொரியன் என்றாலும் ஏதோ ஒரு அழகான தமிழ்ப்படம் பார்த்தது போல் உணர்வைத் தந்தது. யே-சாங் தன் தந்தையை ‘அப்பா’ (கொரியனிலும் தந்தைக்கு அப்பா தான்) என்று அழைக்கும்போது ஏதோ ஒரு தமிழ்க்குழந்தையே பேசுவது போலிருந்தது. பிரம்மாதமான இசை, ஆங்காங்கே குட்டிக்குட்டி சிரிப்பலைகள், மனதை உருக்கும் சோகக்காட்சிகள் என ஒரு கலக்கலான ஃபீல்குட் திரைப்படமாக இது இருக்கிறது. சமீபத்தில் என்னை அழவைத்த ஒரே திரைப்படம் இதுதான்.    

Comments

  1. செமையான விமர்சனம்
    மெக்
    தம +
    செமையான கம்பாக்...

    ReplyDelete
  2. Hai. Bro un num kedaikuma nsvaishu2346@gmail.com ithu en mail unga num. Ah send pannunga ... Blogger pathi konjam tharinjukanum athuku thaan...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை